Thursday, January 21, 2010

அவளின் காதல் கதை...
தட்டிலிருந்து தவறி விழும்
இறைச்சிக்காக
சுற்றிவரும் நாயின் நாக்கில்
டிராகனின் உக்கிரம் -
அவன் காதல்.

வேதாளத்தின் விடுகதைக்கு
விடை சொல்லபோய்
பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை

காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
வன்புனர்கிறது -
மலைபாம்பு

குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை;
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...
திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...

அணையும் தருவாயிலிருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் இட்டு
திரியை தூண்டுகிறாள்
சிறுமியொருத்தி...

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்

எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்

Monday, January 18, 2010

எழுத முடியாமல்..........

உன் விழிகளை வெல்லும் கவிதையை
எழுத முடியாமல்
தோற்றுக்கொண்டே இருக்கிறது
என் தூரிகை.....

அசைவின்றி இருக்கிறது
உன் இதழ்கள்
ஆனால்
உன்தன் மௌனம் மட்டும்
எதையோ சப்தமாய் பேசுகிறது
என்னோடு...


உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...

யாருமில்லை என்பதால்.............

1.
யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

2.
தலைகீழாக தொங்கியபடி
எப்படிநடக்கிறான்?
என்கிற கேள்வி
வவ்வாலுக்கு இருக்குமோ
என்கிற கேள்வி எனக்கு.

3.
எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

4.
குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

5.
மீன் தொட்டியில் இட்டு வளர்க்கும்
குழந்தை என நெளிவாள்
சம்பள நாளில்
இவள் எப்போதும்.